பன்னீர் ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி Print News
Published On May 23, 2018 04:50 PM
o panneerselvam
அ.தி.மு.க.,வில், துணை முதல்வர் பன்னீர் செல்வம், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர் களிடையே மோதல் அதிகரித்து வருகிறது. பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுக்கும்படி, பன்னீருக்கு, அவரது ஆதரவாளர்கள், நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே, இணைப்பு ஏற்படவில்லை.
கொந்தளிப்பு
கூட்டுறவு சங்கத் தேர்தலில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு,பதவி வழங்கபட வில்லை; கட்சி பதவியும் வழங்கப்படவில்லை. இது, அவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.முதல்வர் பழனிசாமி, தன்னை முன்னிறுத்துவதிலும், பன்னீர்செல்வத்தை ஒதுக்குவதிலும் கவனமாக உள்ளார்.

சமீபத்தில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த அரசு விழா மற்றும் கொடைக்கானலில் நடந்த, மலர் கண்காட்சி துவக்க விழாவிற்கு, பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை.

'பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும், திட்டமிட்டு நம்மை புறக் கணிக்கின்றனர்.இதை தட்டி கேட்க வேண்டும்' என, பன்னீர்செல்வத்திற்கு, அவரது ஆதரவாளர்கள், சில தினங்களாக நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அத்துடன் சமூக வலைதளங்களிலும், தங்கள் எதிர்ப்பை பதிவிடத் துவங்கி உள்ளனர். ராஜகோபால் என்பவர், 'பன்னீர் ஒருங்கிணைப் பாளர் என்பதால், ஒருங்கிணைக்கும் முயற்சியில் இருக்கிறார். எந்த கூட்டத்திற்கும், அவரின் பெயரை, படத்தை பயன்படுத்த மறுக்கின்றனர். 'பன்னீருக்கு தெரியாதது எதுவும் இல்லை; நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

'இந்தவிவகாரத்தில், பன்னீர் மட்டும் பொறுமையாக இருக்கட்டும்; எங்களால், மக்களால் பொறுமையாக இருக்க முடியாது. ஒன்றிணைவோம்; போராடு வோம்' என, டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சிவகுமார் என்பவர் பதிவில், 'பன்னீர் தலைமை ஏற்க, தொண்டர்கள் முயற்சிக்க வேண்டும். அவர், கட்சியின் ஒற்றை தலைமையை ஏற்றால் மட்டுமே, அ.தி.மு.க.,விற்கு எதிர்காலம்' என, குறிப்பிட்டு உள்ளார்.
முற்றுப்புள்ளி
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் அதிரடி நடவடிக்கைகள், பழனிசாமி தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பன்னீரும், பழனிசாமியும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கா விட்டால், கட்சியில் எந்த நேரத்திலும் கொந்தளிப்பான நிலை ஏற்படலாம் என, கட்சி நிர்வாகிகளே கூறுகின்றனர்.

தகவல் தொழில்நுட்ப செயலர் ஆவேசம்
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலராக உள்ள ராமச்சந்திரன், ஜெ.,யால் நியமிக்கப்பட்டவர்; பன்னீர் ஆதரவாளர்.பன்னீர் அணி தனியே செயல்பட்ட போது, பழனிசாமி அணி சார்பில், தகவல் தொழில்நுட்ப செயலராக, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நியமிக்கப் பட்டார். அணிகள் இணைந்த பின், செயலராக ராமச்சந்திரன் உள்ளார்.