இந்தியர்கள் தலையில் பேரிடி; வல்லரசு நல்லரசாகுமா? Print News
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது சான்றோர் வாக்கு. இந்த வாக்கின் வழி நடப்போர் அதிகம் இந்தியர்களாகத்தான் இருக்க முடியும்.
Published On May 22, 2018 10:59 AM
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வேலைக்காக குடியேறி இருக்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து என்று எட்டுத்திசைகளிலும் நம் நாட்டவர்கள் பரவி உள்ளனர். அவ்வாறு வேலைக்கு சென்று பல ஆண்டுகளாக அங்கேயே குடியமர்ந்து குடியுரிமை பெற்றவர்களும் ஏராளம் உண்டு.

இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம். வெளிநாடுகளில் வேலைக்கு சென்று தங்கியவர்களில் பலர் அந்த நாடுகளில் அரசியல், நீதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று பல தரப்பட்ட துறைகளில் சாதனைகளை படைத்ததோடு மட்டுமின்றி உயர் பதவிகளையும் வகித்து வருகிறார்கள் என்பது இந்தியாவுக்கு பெருமை அளிக்கக்கூடிய ஒன்று.

இந்தியர்கள் அதிக அளவில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக திகழ்வது அமெரிக்கா. 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 28 லட்சத்துக்கு 43 ஆயிரம். தற்போது இந்த எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டிவிட்டது. இவர்களில் 6 லட்சம் பேர் அங்கேயே பிறந்து வளர்ந்த வம்சாவளிகள். அமெரிக்காவில் நியூயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், நியூஜெர்சி உள்ளிட்ட பகுதி மக்களில் இந்தியர்கள் 50 சதவீதம் என்ற அளவில் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கலிபோர்னியாவை இந்தியர்கள் நிறைந்த பகுதி என சொல்லலாம். அங்கு 5 லட்சம் பேரும், நியூயார்க்கில் 2½ லட்சம் பேரும், நியூஜெர்சியில் 2¾ லட்சம் பேரும், டெக்சாஸில் 2½ லட்சம் பேரும் இருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை ஒப்பிடும்போது இந்தியர்கள் சிறந்த கல்வியறிவு கொண்டவர்களாகவும், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் திறமை மிக்கவர்களாகவும் ஜொலிப்பது இந்திய தேசத்துக்கு கிடைத்த பெருமையே. சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் கலிபோர்னியா மாகாணத்தில் பெருமளவு வசிக்கும் இந்திய பொறியாளர்கள் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையையே முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்றால்கூட அது மிகையாகாது.

அதுமட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகளிலும் இந்தியர்கள் உயர்ந்த பதவிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு வேலைவாய்ப்பு குவிந்து இருப்பதை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்த ஏராளமான இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் அமெரிக்காவிற்கு பறக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம்காட்டி வருகிறது. வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இது இந்தியர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசு பொதுப்பிரிவினர் 65 ஆயிரம் பேருக்கும், அமெரிக்க கல்லூரிகளில் உயர்கல்வி முடித்தவர்கள் 20 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 85 ஆயிரம் பேருக்கு எச்-1பி விசாவை வழங்கியது. இவற்றில் கிட்டத்தட்ட 70 சதவீதம் விசாக்களை இந்தியர்கள் பெற்று வந்தனர்.

இதேபோல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, இந்தியர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். எச்-1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றும் ஒருவர் தனது வாழ்க்கை துணைக்கு, அதாவது ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும் எச்-4 விசா மூலம் வேலைபார்க்கும் வாய்ப்பை வழங்கினார். இதன்மூலமும் இந்தியர்கள் அதிக பயன்பெற்று வந்தனர்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்பின், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கொள்கை இந்தியர்களின் தலையில் பேரிடியை விழச் செய்துள்ளது. எச்-4 விசா வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

டிரம்ப்பின் இந்த முடிவை எண்ணி இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வேதனை அடைந்துள்ளன. இந்தியாவுடன் நல்லுறவு வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் அமெரிக்கா, இந்த விஷயத்தில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க இருப்பது நல்லதல்ல என்று அமெரிக்க எம்.பி.க்கள், பொருளாதார வல்லுநர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எச்-4 விசாவில் 90 சதவீதம் இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பதால் இந்த முடிவு இந்தியர்களுக்கு மட்டுமின்றி இருநாட்டு உறவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் பணியாற்றும் ஒரு இந்திய பிரஜையின் வருமானம் அவரோடு நின்றுவிடுவதில்லை. கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வந்து பணியாற்றும் ஒரு இந்திய குடிமகனின் வருவாயை அவரது பெற்றோர், குழந்தைகள், குடும்பத்தினர் என்று பலரும் வாழ்வாதாரமாக நம்பி இருக்கிறார்கள். அவர்களது வாழ்விலும் மண்ணை அள்ளிப்போடுவதைப்போன்ற காரியத்தில் அமெரிக்கா கவனம் செலுத்துவது கூடாது என்று இப்போதே கண்டனக்குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.

வல்லரசு என்ற தனித்துவத்துடன் திகழும் அமெரிக்கா சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் வெளிநாட்டவரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்று அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளிகள் மட்டுமல்ல... இந்திய தேசத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் வலுவான கோரிக்கையாகவும் இருக்கிறது.

அதேபோல் எச்-4 விசா ரத்து நடவடிக்கையை கையில் எடுப்பதன் மூலம் அமெரிக்கா தனது நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரத்திலும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதுவும் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை கைவிடுவதே அமெரிக்காவுக்கு நலம் பயக்கும். வல்லரசு நாடான அமெரிக்கா தன் நாட்டவருக்கு மட்டுமின்றி, தன்னை நாடி வருவோருக்கும் நல்லரசாக இருக்க வேண்டும்.

அதேபோல் இந்திய அரசும் எச்-4 விசா விவகாரத்தில் அமெரிக்காவிடம் விரைவாக ஸ்திரத்தன்மையான பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு காணவேண்டும். அப்போதுதான் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் எதிர்காலம் பிரகாசிக்கும்.