3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது Print News
மதுரவாயலில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published On May 21, 2018 03:49 PM
பூந்தமல்லி,

பீகாரைச் சேர்ந்தவர் அம்புஜ்குமார்(வயது 24). இவர், மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

தனது வீட்டின் அருகே சென்றபோது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 3 பேர் அம்புஜ்குமாரை வழிமறித்து கத்தியால் அவரது கை, காலில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

பின்னர் அந்த நபர்கள், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பணி முடிந்து தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த மதுரவாயல் பல்லவன் நகரைச் சேர்ந்த சித்தார்த்(22) என்பவரது தலையில் கத்தியால் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

அத்துடன் அதே பகுதியில் நடந்து சென்ற மேலும் ஒருவரையும் கத்தியால் வெட்டிய மர்மநபர்கள், அவரிடம் இருந்தும் செல்போனை பறித்து சென்று விட்டனர்.

மர்மநபர்கள் கத்தியால் வெட்டியதால் காயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி அவர்கள் மதுரவாயல் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதில், மர்மநபர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் அவர்களது மோட்டார் சைக்கிள்களின் பதிவெண்ணையும் தெரிவித்தனர்.

இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் 3 பேரை கத்தியால் வெட்டி, செல்போன் பறிப்பில் ஈடுபட்டது மதுரவாயல், ஏரிக்கரையை சேர்ந்த சேகர்(25), மணிவண்ணன் (26), சங்கர் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரையும் சிறையில் அடைத்தனர். கைதான 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.